தமிழ் வானொலி நிலையங்களை முடக்குவது பேராபத்தாக முடிந்துவிடும் - கி.வீரமணி கண்டனம்..

 
கி வீரமணி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள தமிழ் வானொலி நிலையங்களை மூடும் நடவடிக்கைக்கு திராவிடர் கழகத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களை  தனியார் மயமாக்குவதையே நோக்கமாக கொண்டு செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு  தமிழகத்திலும் , புதுச்சேரியிலும் இயங்கிவரும் வானொலி நிலையங்களை முடக்க  நடவடிக்கை எடுத்து வருவதாக   செய்திகள் வெளியாகியுள்ளன.  தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள  6 வானொலி நிலையங்களில், சென்னையில் மட்டும்  நிகழ்ச்சி தயாரிப்பு நிலையமாக வைத்துக்கொண்டு புதுச்சேரி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய 5 வானொலி நிலையங்களையும்  வெறும்  ஒலிபரப்பு நிலையங்களாக மாற்றுவது என பிரசார் பாரதி முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

வானொலி மையம்

இதுவரை உள்ளூர் பண்பாடு, விவசாயம், நாட்டுப்புறக் கலைகள், அப்பகுதி மக்களுக்குத் தேவையான தகவல்கள், வட்டாரச் செய்திகள் என ஒவ்வொரு வானொலி நிலையமும் ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும்  தனது சொந்த தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள "ஒரு மாநிலம், ஒரு முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம்" என்ற புதிய திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வானிலை நிலையங்களும் மூடப்படும் அபாயம் இருப்பதாத வீரமணி தெரிவித்துள்ளார்.

“முடிவை கைவிடுங்கள்… இல்லையெனில் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்” – மத்திய அரசை எச்சரிக்கும் கி.வீரமணி!

இதன்மூலம் தமிழ்மொழிக்கான முக்கியத்துவம், தமிழ் பண்பாட்டு நிகழ்வுகள்  யாவும் கேள்விக்குரியாவதோடு, உள்ளூர் நிகழ்ச்சிகள் தயாரிப்பு முற்றாக முடக்கப்படும்  என்று கூறினார். ஒரே ஒலிபரப்பாக வானொலி நிலையங்களைக் குறிவைத்து முடக்குவது,  ஒரே நாடு, ஒரே மொழி எனும் ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே என்று சுட்டிக்காட்டிய கி.வீரமணி , இது ஆபத்திலும் பேராபத்தாக முடிந்துவிடும் என்றார். எனவே மத்திய அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த தமிழகம் மற்றும் புதுவை அரசுகளும்,  நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.