பாஜகவில் கடும் உட்கட்சி பூசல்! அதற்கு மோடியே காரணம் - கே.பாலகிருஷ்ணன்

 
K balakrishnan

பாரதிய ஜனதா கட்சி மோடி என்ற ஒற்றை உருவத்தை வைத்து அரசியல் செய்வதால் பாஜகவில் கடுமையான புகைச்சல் ஏற்பட்டு உள்ளது. விரைவில் பாஜகவின் உட்கட்சி புகைச்சல் வெளியில் வரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ.எம் கே.பாலகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்.. முக்கிய  கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்.! - Seithipunal

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான கண்டனத்துக்குரியது. ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை பரப்பலாம். ஆனால் ஆளுநராக இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது கடுமையான கண்டனத்துக்குரியது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் நாட்டின் வரலாறு தெரியாமலும் ஆளுநர் பேசுவது கண்டனத்துக்குரியது.

அதைப்போலவே கன்னியாகுமரியில் நடைபெற்ற தேரோட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்ட பொழுது அவர்களை தேர் இழுக்க விடாமல் செய்வது பாஜகவின் சதி செயல். சட்டமன்ற உறுப்பினர் காந்தி தலைமையில் இவ்வாறு நடந்துகொண்டது கண்டனத்துக்குரியது.நமது நாட்டில் எல்லா மதத்தினரும் எல்லாவிதமான கோவில்களுக்கும் செல்வது இயல்பு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி வேலை செய்கிறது. இதை தமிழக மக்கள் கண்டிப்பாக நன்றாக உணர வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் தமிழக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பாஜக சதி வேலை செய்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மம்தா பானர்ஜி செய்யும் செயல் பாஜகவிற்கு உதவுவதாக அமைகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அழைத்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயலும் சமயத்தில் இவ்வாறு மம்தா பானர்ஜி செய்வது பாஜகவுக்கு உதவுவது போல் அமைகிறது. 57 பதவிகளுக்கான மாநிலங்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பாஜகவிற்குள் ஒற்றுமை இல்லாததன் காரணமாக தான் பல இடங்களில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர் கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள்.

மேலும் பாஜகவிற்குள் குத்துவெட்டு ஆரம்பித்துவிட்டது. மிக விரைவில் பாஜகவிற்குள் மிகப்பெரிய பூகம்பம் வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாரதிய ஜனதா கட்சி மோடி என்ற ஒற்றை உருவத்தை வைத்து தான் அரசியல் செய்கிறது. பல தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் வெளிக்காட்டுவதில்லை. ஆகவே பாஜகவில் கடுமையான புகைச்சல் ஏற்பட்டு உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் உட்கட்சி புகைச்சல் வெளியில் வரும். மத்திய அரசின் திட்டமான விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வங்கி கணக்கில் சிறு குறு விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும் திட்டத்தில் 145 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அதில் பாஜகவின் பங்கு அதிகம். அவர்கள் விவசாயிகள் அல்லாதவர்களை தாங்கள் பணம் கொடுப்பதாக கூறி கட்சியில் சேர்த்து தில்லுமுல்லு செய்து உள்ளார்கள். இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் நிதானமாக நடவடிக்கை எடுத்து வருகிறது அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாங்கள் பாராட்டுகிறோம். அதே சமயத்தில் ஒரு தனிச் சட்டம் உருவாக்கி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கைப்பற்றி செயல்பட வைக்க வேண்டும்” என தெரிவித்தார்.