பஞ்சாபில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.. ஜே.பி. நட்டா உறுதி

 
பா.ஜ.க.

பஞ்சாபில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

பஞ்சாபில் அண்மையில் நடந்த அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு தற்போது முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் பஞ்சாப் போலீஸ் புலனாய்வு பிரிவு மீத ஆர்.பி.ஜி. தாக்குதல் நடத்தியது. இது அம்மாநில பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியதோடு, ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

பகவந்த் மான்

இந்நிலையில் பஞ்சாபில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றுகையில் கூறியதாவது: பஞ்சாபில் நம் (பா.ஜ.க.) ஆட்சி இல்லை. ஆனால் பஞ்சாப் முடிவுகள் மற்றும் தற்போதைய நிலவரத்தை பார்க்கும்போது, வரும் காலங்களில், பா.ஜ.க. ஆட்சி அமையும் என்று என்னால் கூற முடியும்.

ஜே.பி.நட்டா

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் 30 முதல் 35 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால் அவர்களின் (காங்கிரஸ்) முதல்வர்கள் யாரும் 5 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் பதவியை தக்கவைக்க முடியவில்லை.  37 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் இரண்டு முறை ஆட்சியை அமைத்தது பா.ஜ.க.தான். இவ்வாறு அவர் தெரிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. இரண்டு இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.