மோடி தடுப்பூசி எப்படி இருந்தது?.. எதிர்க்கட்சிகளை கலாய்த்த ஜே.பி. நட்டா

 
ஜே.பி. நட்டா

முன்பு கோவிட் தடுப்பூசிகளை விமர்சனம் செய்து விட்டு அந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட எதிர்க்கட்சியினரை, மோடி ஊசி எப்படி இருந்தது? என்று கேள்வி கேட்டு ஜே.பி. நட்டா கிணடலடித்தார்.

சில எதிர்க்கட்சி தலைவர்கள் கோவிட் தடுப்பூசிகளை மோடி தடுப்பூசி என்றும் பா.ஜ.க. தடுப்பூசி என்றும் கூறினர். ஆனால் இப்போது அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நான் அவர்களிடம் கேட்கிறேன், மோடி தடுப்பூசி எப்படி இருந்தது? நீங்கள் நோயிலிருந்து பாதுகாப்பு பெற்றீர்களா?. அவர்கள் (எதிர்கட்சி தலைவர்கள்) மக்களை தவறாக வழி நடத்தினார்கள். பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கும்போது இந்திய மக்களை எதிர்த்த அவர்கள் இப்போது வாக்கு கேட்கிறார்கள்.

கோவிட் தடுப்பூசிகள்

2020ல் கோவிட் தொடங்கிய போது, ஏப்ரல் மாதத்தில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டது. மேலும் 9 மாதங்களில் இந்தியா தனது சொந்த தடுப்பூசிகளை தயாரித்தது. ஒன்பது மாதங்களுக்குள் பிரதமர் மோடி இந்தியாவுக்கு இரண்டு தடுப்பூசிகளை வழங்கினார். இப்போது இங்கு வரும் கட்சியினர் (எதிர் கட்சியினர்) தடுப்பூசி போட வேண்டாம்,  சோதனைகள் சரியாக செய்யப்படவில்லை என்று மற்றவர்களிடம் கூறினார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்பு, கொரோனா வைரசுக்கு எதிரான பா.ஜ.க. தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டேன். மருத்துவர்களின் மீது நம்பிக்கை உள்ளது ஆனால் பா.ஜ.க.வின் அரசியல் தடுப்பூசியை நான் எடுக்க மாட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் பின்னர் அகிலேஷ் யாதவ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். ராஜஸ்தான் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பைர்வா, இது பா.ஜ.க. தடுப்பூசி என்று கூறி கோவிட் தடுப்பூசியை எடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.