"இதான் பெண்ணுக்கு மரியாதை கொடுக்குற லட்சணமா?" - வீதிக்கு வந்த "பாசமலர்" பாலிட்டிக்ஸ்!

 
ஜோதிமணி செந்தில்பாலாஜி

வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் அண்ணன், தங்கை போல பழகியவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும். அண்ணன் மீது ஒரு குற்றச்சாட்டு என்றால் முதலில் அவருக்கு ஆதரவாக நிற்பவர் ஜோதிமணி தான். மக்களவை தேர்தல் தான் இருவருக்குள்ளும் இப்படியொரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கரூர் தொகுதியில் ஜோதிமணியை நிப்பாட்டியதற்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. ஆனால் உடன் நின்றவர் செந்தில் பாலாஜி. 

தீயாக களப்பணியாற்றி அதிக வாக்கு வித்தியாசத்திலும் வெற்றிபெற வைத்தார். நன்றி மறவாத ஜோதிமணி, நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தல், அதற்கு முன்னதாக அரவக்குறிச்சி இடைத்தேர்தல் என செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். மலர்ந்தும் மலராத பாசமலர் படத்திலேயே அண்ணன் தங்கைக்குள் விரிசல் வந்தது. அரசியலில் அது வராமல் இருந்தால் தானே ஆச்சரியம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை என்பது தானே பல மாமங்களாக நாம் போற்றும் பொன் வாக்கியம். 

மறுவாக்கு எண்ணிக்கையிலும் நாங்களே லீடிங்.. ஆனால்?!' -தர்ணா போராட்டத்தில்  கொதித்த செந்தில் பாலாஜி | senthil balaji slams ec officers over result  controversy

ஆம் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. விரிசலின் ஆரம்பப் புள்ளி உள்ளாட்சி தேர்தல் என சொல்லப்படுகிறது. பிரச்சாரத்திற்கு செந்தில்பாலாஜி தரப்பிடம் தூது சென்றிருக்கிறது. ஜோதிமணியோ தட்டிக் கழித்திருக்கிறார். இதனால் அப்செட்டான அமைச்சர், அரசு விழாவில் ஜோதிமணியை தவிர்த்துள்ளார். இது மறைமுகமான பழிவாங்கல் நடவடிக்கையாக தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த மோதலை மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட முகாம் உச்சக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. கரூர் ஆட்சியர் அலுவலகத்திலேயே படுத்துறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார் ஜோதிமணி.

உள்ளிருப்பு போராட்டம் ..வாபஸ்.. ஜோதிமணியின் பரபரப்பு நிமிடங்கள்.. | karur  MP Jothimani protest Withdraw

இதனை விமர்சித்த செந்தில் பாலாஜி, "ஒருசிலர் (ஜோதிமணி) தங்களுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காகவும் அரசியல் மற்றும் சுய விளம்பரத்திற்காகவும் பிரச்சினை செய்கிறார்கள்” என்றார். இச்சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பாசமலர் பூகம்பம் வீதிக்கே வந்துவிட்டது. கரூர் திமுக அலுவலகத்தில் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்  காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி கலந்து கொண்டார். ஆனால் அவரிடம் கேட்காமலேயே இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.


இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி திமுகவினரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு தகாத வார்த்தைகளில் திட்டி அவரை திமுகவினர் வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. ஆவேசமாக வெளியே வந்த ஜோதிமணி, அப்போது, ''கூட்டணி பேச்சு வார்த்தைக்கு தான வந்திருக்கேன். நான் என்ன விருந்துக்கா வந்திருக்கேன். வெளியே போக சொல்ல இவங்க யாரு. இதான் கூட்டணி தர்மமா? திமுகவுல பெண்கள இப்படி தான் நடத்துவீங்களா?” என கேள்வியெழுப்பியவாறே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பான காணொலி இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.