நாடாளுமன்ற நடவடிக்கைகள் எப்படி நடக்கிறது என்பது எனக்கு புரியவில்லை... ஜெயா பச்சன்

 
ஜெயா பச்சன்

நாடாளுமன்ற நடவடிக்கைகள் எப்படி நடக்கிறது என்பது எனக்கு புரியவில்லை என்று மாநிலங்களவை எம்.பி. ஜெயா பச்சன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், மத்தய அரசு விவாதம் நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றியது. இது தொடர்பாக முன்னாள் பாலிவுட் நடிகையும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெயா பச்சன் கூறியதாவது: இது போன்ற முக்கியமான மசோதா ராஜ்யசபாவில் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்பதே எனது கருத்து. நாடாளுமன்ற நடவடிக்கைகள் எப்படி நடக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. 

நரேந்திர சிங் தோமர்

நான் பல ஆண்டுகளாக எம்.பி.யாக இருக்கிறேன். ஆனால் அவையில் எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது, நடுவில் மத்திய அமைச்சர் குறுக்கிட்டு பேசுவதற்கு அவகாசம் கூட வழங்காத சூழலை பார்ப்பது இதுவே முதல் முறை. தனது கருத்தை கூட சொல்ல எதிர்க்கட்சி தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.  சலசலப்புக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டது, இது என்ன. சிறிய கட்சிகள் உள்ளன, பேசுவதற்கு அந்த கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை. 

நாடாளுமன்றம்

விவசாயிகள் சந்திக்கும் இழப்பு, போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று மக்களவை முழுமையாக நடைபெறவில்லை, எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.