ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குஜராத்தை இழிவுப்படுத்தும் முயற்சி.. பா.ஜ.க. அமைச்சர் பதிலடி

 
ராகுல் காந்தி

குஜராத்தில் கொரோனாவால் 3 லட்சம் பேர் இறந்தனர் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது மற்றும் இது குஜராத்தை இழிவுப்படுத்தும் முயற்சி என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஜிது வகானி தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் அம்மாநில கல்வித்துறை அமைச்சரும், மாநில அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான ஜிது வகானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தொற்றுநோய் காலத்தில், கோவிட் நோயால் இறந்தவர்களுக்கும்,  பிற நோய்களால் இறந்தவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. குஜராத்தில் கொரோனா வைரஸால் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. குஜராத்தை கேவலப்படுத்தும் இது போன்ற முயற்சிகளை நாங்கள் கண்டிக்கிறோம். 

ஜிது வகானி

பொய்யான செய்திகள் மூலம் மக்களை தூண்டி விட்டு, மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குவதற்கான அவர்களின்  திட்டத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸால் இது செய்யப்படுகிறது. கோவிட் காரணமாக குஜராத்தில் இறந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 10,888 (நவம்பர் 24ம் தேதி நிலவரப்படி 10,092) மற்றும் ராகுல் காந்தி கூறியது போல் 3 லட்சம் அல்ல. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில்  அதிகாரப்பூர்வ கோவிட்-19 இறப்புகள் 1.40 லட்சமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை முறையே 16,553, 8,954 மற்றும் 13,552 ஆகும். 

காங்கிரஸ்

ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் டெல்லியில் அதிகாரப்பூர்வ கொரோான இறப்பு எண்ணிக்கை 25,091 ஆகும். ராகுல் காந்தி ஊடகங்கள் முன் பதில் அளிக்க வேண்டும் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களும் ஜோடிக்கப்பட்டவை என்று அறிவிக்க வேண்டும். தொற்றுநோய் காலத்தில் பிற நோய்களால் இறந்தவர்களை கொரோனா வைரஸால் இறந்தவர்களாக காட்டி மக்களை தவறாக வழிநடத்துக்கும் ராகுல் காந்தியின் முயற்சியை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.