பெரும் தொகையுடன் சிக்கிய ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.. ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்க பா.ஜ.க. சதி- காங்கிரஸ்

 
காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் பெரும் தொகையுடன் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிடிபட்டதை குறிப்பிட்டு, இது ஜார்க்கண்ட் அரசை கவிழ்பதற்கான பா.ஜ.க.வின் சதி என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ஜம்தாரா தொகுதி எம்.எல்.ஏ. இர்பான் அன்சாரி, கிஜ்ரி தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் கச்சாப் மற்றும் கோலேபிரா எம்.எல்.ஏ. நமன் பிக்சல் ஆகியோர் கடந்த சனிக்கிழமை மாலை மேற்கு வங்கம் ஹவுராவில் ஒரு எஸ்.யு.வி. வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனத்தை மேற்கு வங்க போலீசார் சோதனையிட்டனர். வாகனத்தின் உள்ளே பெரும் பணம் இருப்பதை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

மேலும் அந்த வாகனத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை தவிர்த்து மேலும் 2 பேர் இருந்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெரும் பணத்துடன் சிக்கியதையடுத்து, ஜார்க்கண்டில் ஆட்சியை சீர்குலைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. ஜார்க்கண்ட் காங்கிரஸ் செயல் தலைவர் பந்து டிகே கூறுகையில், தங்களுடையது அல்லாத எந்த அரசாங்கத்தையும் சீர்குலைக்க முயற்சிப்பது பா.ஜ.க.வின் இயல்பு. முதல்வர் ஹேமந்த் அரசுக்கு எதிராகவும் இதுவே செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு (பா.ஜ.க.) பணம் கொடுத்த ஒரே காரணம் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.

அர்ஜூன் முண்டா

காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அர்ஜூன் முண்டா கூறுகையில், காங்கிரஸூக்கு மற்றவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி தங்கள் சொந்த தவறுகளை கம்பளத்தின் கீழ் துடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. காரிலிருந்து மீட்கப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்) விளக்க வேண்டும் என தெரிவித்தார்.