"தமிழகத்தை ஸ்டாலின் மருமகன் ஆள்கிறார்; அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி” - போட்டு தாக்கிய ஜெயக்குமார்!
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாங்காடு பேரூராட்சியில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக மனு வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது என்னவெல்லாம் பேசினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் இப்போது ஆட்சிக்கு எதிராகவும், மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவும் பேசினால் வழக்கு போடுகிறார்கள். கைது செய்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி தான் அமலில் உள்ளது.
தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை. அவர் மருமகனான சபரீசன் தான் ஆட்சி செய்கிறார். கருத்து சுதந்தரத்திற்கு எதிரான அரசாக இந்த திமுக அரசு உள்ளது. திமுக ஆட்சியில் புதிய திட்டம் ஒன்றுமே அறிவிக்கப்படவில்லை. இப்போது திறக்கப்படும் கட்டடங்கள், பாலங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான். பொட்டாஷ் உரம், கட்டுமான பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், காய்கறி, மளிகை பொருட்கள் விலை ஏற்கனவே உயர்ந்துவிட்டது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்கும் குரல் கொடுப்பதில்லை.
தமிழக மக்களின் அதிருப்தியைப் பெற்ற ஒரு கட்சியாக ஏற்கனவே திமுக மாறிவிட்டது. அடுத்து நடக்கும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும். அதிமுகவை பொறுத்தவரையில் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் அவரின் வாரிசுகளிடம் மீண்டும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக சட்ட வல்லுநருடன் கலந்து ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும். ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தீபா, தீபக் ஒத்துழைப்பைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் எங்களுக்குக் கோயில் போன்றது" என்றார்.