ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாம் முதல்வர் மட்டுமல்ல, பா.ஜ.க.வின் வில்லன், வடகிழக்கின் மிர் ஜாபர்.. ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

 
ஹிமந்தா பிஸ்வா சர்மா

ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாம் முதல்வர் மட்டுமல்ல, பா.ஜ.க.வின் வில்லன் என்றும் வடகிழக்கின் மிர் ஜாபர் என்றும்  ஜெய்ராம் ரமேஷ் தாக்கினார்.

அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எதிரான 7 குறிப்பிட்ட வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் நேற்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில் கூறியதாவது:  அவர் (ஹிமந்தா பிஸ்வா சர்மா) அசாம் முதல்வர் மட்டுமல்ல. பா.ஜ.க.வின் வில்லன், காங்கிரஸிடம் இருந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டு காங்கிரஸை முடிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டவர். 

ஜெய்ராம் ரமேஷ்

மிர் ஜாபர் போல ஒருவர் என்றால் அது ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்னும் ஒரு மிர் ஜாபர் ஜம்மு காஷ்மீரில் (குலாம் நபி ஆசாத்) உள்ளார், ஆனால் இவர் (ஹிமந்தா பிஸ்வா சர்மா) வடகிழக்கின் மிர் ஜாபர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைத்து பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர் வெற்றிகரமாக செயல்படுத்த ஆரம்பித்த இடம் பிளாசி போராகும். நவாபின் சேனாதிபதியாக இருந்த மிர் ஜாபருக்கு வங்காளத்தின் ஆட்சி கனவை விதைத்து 1757ம் ஆண்டில் நடந்த பிளாசி போருக்கு அவர் படையுடன் வராமல் தடுத்து ஆங்கிலேயர் வங்காளத்தை கைப்பற்றி இந்தியாவில் தங்கள் ஆட்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.

சூடு பிடிக்கும் கடித விவகாரம்….. குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் காங்கிரஸ்காரர்கள்

ஹிமந்தா பிஸ்வா சர்மா பா.ஜ.க.வில் இணைவதற்கு முன் காங்கிரஸில் இருந்தார். தருண் கோகாய் முதல்வராக இருந்த காலத்தில்  அவரது அமைச்சரவையில் ஹிமந்தா பிஸ்வா சர்மா அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸிலிருந்து பிரிந்து பா.ஜ.க.வில் ஹிமந்தா பிஸ்வா சர்மா  இணைந்தார்.