சீன் பை சீன் ஆகத்தான் போகணும்! இப்போதே கிளைமேக்ஸ்க்கு செல்லக் கூடாது - கமல்ஹாசன்

 
kl

சீன் பை சீன் ஆகத்தான் போகணும்.   இப்போதே கிளைமேக்ஸ்க்கு செல்லக் கூடாது  என்று தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.  திமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை எப்படியும் திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்ற முயற்சிகள் நடந்தன.  உதயநிதி ஸ்டாலின் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்தார்.  ஆனால் கமல்ஹாசன் விடாப்பிடியாக திமுக கூட்டணிக்குள் செல்லாமல் இருந்தார்.   இதை அடுத்து அவர் சரத்குமார் உள்ளிட்டோருடன் கூட்டணி அமைத்து அந்த தேர்தலில் போட்டியிட்டார்.

 அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு படுதோல்வி கிடைத்தது .  கமல்ஹாசனே அந்த தேர்தலில் தோல்வியடைந்தார் .  இதனால் அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் வெளியேறி திமுகவில் சேர்ந்தனர்.   இதன்பின்னர் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கைகோர்த்து வேலைகள் செய்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். அப்போதே திமுக கூட்டணிக்கான அச்சாரமாகத் தான் இது தெரிகிறது என்று விமர்சனங்கள் எழுந்தன. 

kl

 அதே மாதிரி திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்று கமல்ஹாசனும் அவருடன் நடந்து சென்றார்.  அதன் பின்னர் ராகுல் காந்தியுடன் உரையாடலில் கலந்து கொண்டார்.  இது மேலும் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைகிறார் என்பது உறுதியானது. அதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்திருக்கிறார் கமல்ஹாசன்.  இதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் இணைவது உறுதியாகிவிட்டது என்ற பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

 இந்த நிலையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது.  மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார் .  ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை ’என்கிற தலைப்பில் இந்த புகைப்பட கண்காட்சி நடக்கிறது . இதன் பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 அப்போது,  முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் தனக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது.   முதலமைச்சருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.   நிகழ்ச்சியில் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் படப்பிடிப்பு ஒத்தி விட்டு வந்திருக்கிறேன் என்றார்.

 அவர் மேலும்,   சவால்களை சந்தித்து படிப்படியாக உயர்ந்து முதலமைச்சரானவர் தான் மு. க. ஸ்டாலின்.  தன் திறமையால் வளர்ந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்.  தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.   அப்போது,  திமுகவுடன் கூட்ட மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,   திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது . சீன் பை சீன் ஆகத்தான் செல்ல வேண்டும் . இப்போதே கிளைமாக்ஸ் செல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு சிரித்தார் கமல்ஹாசன்.