பிபிசி ஆவணப்படத்தின் தொடர்ச்சிதான் இனிகோவின் பேச்சு - காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆவேசம்
திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேச்சுக்கு இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தேச விரோத செயலில் ஈடுபடும் இனிகோ இருதயராஜ் மீது ஆளுநர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இது குறித்து காடேஸ்வர சுப்ரமணியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்காக தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் பாஜக ஆட்சிக்கு எதிராக தேச விரோதிகளுடன் சிலர் கைகோர்த்து இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அண்மையில் பிபிசி நிறுவனத்தின் ஆவணப்படம். அதன் தொடர்ச்சி தான் திருச்சி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜின் பேச்சு.
அவர் கிறிஸ்தவ மக்களிடம் பேசியபோது , நாம் எப்படி ஜெப கூட்டங்களில் பிரச்சாரம் செய்து தமிழகத்தில் திமுக ஆட்சியை கொண்டு வந்தோமோ, அதே போல் நாம் ஜெபம் செய்து 2024 ஆம் ஆண்டில் பாஜகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசி கூறி இருக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ குறிப்பிட்ட ஒரு மதத்தின் சார்பாக பேசுவது பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானது . ஆனால் அனைவருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய ஒரு எம்எல்ஏ ஒரு மத கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களை வழிகாட்டுவதும் அதை கிறிஸ்தவ மிஷனரிகள் ஏற்றுக் கொள்வதும் மதரீதியான செயல்பாடுகளை விட அரசியல் செயல்பாடுகளை செய்கிறது என்பது தெளிவாக புரிகிறது என்று கூறியிருக்கிறார்.
அவர் மேலும் தனது அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கும், அவர்களுக்கு இந்தியாவில் களம் அமைத்துக் கொடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகளையும் மத்திய உள்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் .
மேலும், தேச விரோத செயலில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.