எதிர்வரும் உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வாய்ப்பு.. காங்கிரஸ் எழுச்சி பெறும்.. கருத்துகணிப்பு

 
பா.ஜ.க.

எதிர்வரும் உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஏ.பி.பி.-சிவோட்டர்-ஐஏஎன்.எஸ் ஆகியவை இந்த 5 மாநிலங்களில் மொத்தம் 690 சட்டப்பேரவை தொகுதிகளில் சுமார் 1.07 லட்சம் மக்களிடம் தேர்தல் தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தின. அதில் பல ருசிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த நிறுவனங்களின் கருத்துகணிப்பின்படி, உத்தரகாண்டில் தற்போது வரை  பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர்.  

புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்டில் தற்போது முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டு தொடக்கத்தில் 70 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கணிப்பின்படி, எதிர்வரும் உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல் பந்தயத்தில் தற்போது வரை பா.ஜ.க.தான் முன்னணியில் உள்ளது. அதேசமயம் பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கடும் சவால் கொடுக்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸ்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 38 இடங்களில் வெற்றி பெறும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 19 இடங்கள் குறைவாகும். 2017ல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. 57 இடங்களை கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எதிர்வரும் சட்டப்பேரவை  தேர்தல் காங்கிரஸ் புது  உற்சாகத்தை கொடுக்கும் வகையில் இருக்கும். கடந்த தேர்தலில் 11 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் 32 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.