“2026 தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி”- வெளியான பரபரப்பு அறிக்கை
2026 தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் என்பது உறுதியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கூட்டணிகள், வியூகங்கள், பிரச்சாரங்கள் - இவை அனைத்தும் வேகமாக முன்னேறி வருகின்றன. எந்த புதிய கட்சிகளும் சேராத நிலையிலும் வலுவான வெற்றிக் கூட்டணியாக திகழும் திமுக கூட்டணி, தேர்தல் முன்னெடுப்புகளை படுவேகமாக நகர்த்தி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கருதும் எதிர் தரப்பான அதிமுக, பாஜக உடன் மட்டும் கூட்டணியை திடீரென உறுதி செய்து வைத்திருக்கிறது. மற்றபடி அவர்கள் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதிமுகவின் கூட்டணியில் தேமுதிக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினாலும், தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் பிடிகொடுத்து பேசவில்லை.
இந்நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அதிமுக கூட்டணி குறித்த செய்தி (Press Release) ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிமுக உடனான கூட்டணியில் தேர்தலுக்கு பின்பு வெற்றி பெற்றால் அதிமுகவுடன் பாஜகவிற்கு வழங்க வேண்டிய அமைச்சரைவை குறித்து தக்க நேரத்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். கூட்டணி ஆட்சி என பாஜக தொடர்ந்து கூறி வந்தாலும் அதை அதிமுக மறுத்து வந்தது. தற்போது பாஜகவே அதிகாரப்பூர்வ செய்தியாக இதை வெளியிட்டுள்ளது.


