முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்... அரை நூற்றாண்டு கால அரசியல் உழைப்பின் வெகுமதி

 
ஹ்

MK.STALIN! இதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். தாத்தா, தந்தை, மகன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... என்று சொல்லி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபோது துர்கா ஸ்டாலின் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் வடித்தார்.  அதற்கு காரணம், ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதல்வராக தந்தை கலைஞர் மு. கருணாநிதி இருந்தாலும், அத்தனை சுலபத்தில் இந்த நாற்காலியில் அமரவில்லை.  அதற்காகப்பட்ட அவர் பட்ட வலிகள்தான் துர்காவின் கண்ணீர்.

டு

‘’குழந்தைகளுக்கு கூட அவ்வளவாக தெரியாது.  சிலவற்றை சொல்லாம மறைச்சிடுவோம்.  கூடவே இருக்குற எனக்குத்தான் எல்லாம் தெரியும். இந்த எடத்துக்கு வர்றதுக்கு அவர் கண்ட கனவுகள்; பட்ட கஷ்டங்கள்; வலிகள்.  அதை எல்லாம் தாண்டி வந்து அவர் அந்த இடத்துக்கு வந்து அந்த வார்த்தையை உச்சரிக்கும்போது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது..அழுதுட்டேன்.  வீட்டில் இருந்து புறப்படும்போதே சாலையில் இரு பக்கமும் தொண்டர்கள் நின்று முழக்கம் எழுப்பியதை பார்த்தபோதே எனக்கு ஒரு மாதிரி இருந்தது.  ரொம்ப உணர்ச்சிப்பெருக்கில் இருந்தேன்.  பதவியேற்பில் அவர் அந்த வார்த்தையை உச்சரிக்க துவங்கும்போதே .. அதற்கு மேல் என்னால் கட்டுப்படுத்த முடியல அழுதுட்டேன்’’ என்கிறார் துர்கா.

அவர் மேலும்,  ‘’எது என்னமோ தெரியல..இந்த முறை கொளத்தூர் தொகுதி பிரச்சாரத்துக்கு போனபோது,  அடுத்த முறை முதலமைச்சரின் மனைவியாகத்தான் வருவீங்க என்று சொல்லி வாழ்த்தி அனுப்புனாங்க.  அது நடந்தது.  

டுக்

திமுகவின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் உள்ளார் மு.க.ஸ்டாலின்.   இரண்டு இடங்களுக்கு அவர் படிப்படியாகத்தான் ஏறி வந்திருக்கிறார். வட்ட பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், இளைஞரணி செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என கட்சியில் படிப்படியாக வளர்ந்தார்.   எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர், முதல்வர்  என ஆட்சி நிர்வாகத்தில் படிப்படியாக வளர்ந்தார். 

இன்று(1.3.2023) ஸ்டாலினுக்கு 70ஆவது பிறந்த நாள்.  இந்த 70 வயதில் 56 வருடங்கள் அரசியல் வாழ்க்கை மேற்கொண்டிருக்கிறார்.  

ம்

கலைஞர் மு .கருணாநிதி 14 வயதில் தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.  ‘ஓடி வந்த இந்தி பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழை நாடிதல்லவே என்று முழங்கிக் கொண்டு திருவாரூர் வீதியில் தமிழ் கொடியை ஏந்தி கொண்டு சென்றார்.   அதே 14 வயதில் தான் மு. க. ஸ்டாலின் திமுக கொடியை ஏந்திக்கொண்டு கோபாலபுரம் வீதிகளில் பிரச்சாரம் செய்ய தொடங்கினார்.

சில படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின்,  இது நமது பாதை இல்லை என்பதை உணர்ந்து தீவிர அரசியலில் களம் புகுந்து விட்டார்.  இதேபோன்றுதான் அன்றைக்கும் முரசே முழங்கு,  திண்டுக்கல் தீர்ப்பு,  நீதி தேவன் மயங்குகிறான்,  நாளை நமதே,  ஒரே ரத்தம்,  மக்கள் ஆணையிட்டால்,  குறிஞ்சி மலர் என்று நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வந்த ஸ்டாலின்,   ‘இது நமது பாதை இல்லை’ என்பதை உணர்ந்து தீவிர அரசியலில் களம் புகுந்தார். 

 1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அரசால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது 1976 ஆம் ஆண்டில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் ஓராண்டு  காலம் சிறை தண்டனை அனுபவித்தார்.   அந்த சமயத்தில் சிறையில் ஸ்டாலின் பட்ட சித்திரவதைகளுக்கு அந்த நேரத்தில் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்ததை பார்த்த செய்தியாளர்கள் சாட்சியாக உள்ளனர். 

அப்போது ஸ்டாலினுக்கு விழுந்த அடிகளை தடுத்து தாங்கிப் பிடித்த திமுகவி உடன்பிறப்பு சிட்டிபாபு உயிரையே விட்டார்.  இதனால்தான் சிறையில் படித்த இந்தப் படிப்பினை தான் ஸ்டாலினை தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுக்க வைத்திருக்கிறது. அதனால் தான்  ஸ்டாலினை உருவாக்கியது நானில்லை.  இந்திரா காந்தி தான் என்று சூசகமாக சொன்னார் கலைஞர் மு. கருணாநிதி.

ச்70

திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இருக்க,  தானே திமுக பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் மூத்த நிர்வாகிகளை பங்கு பெறச் செய்து வெற்றி கண்டவர் ஸ்டாலின்.  கோபாலபுரத்தில் திமுக பொதுக்கூட்டம் கூட்டி இருக்கிறேன் . அதில் நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று அண்ணாவிடம் சென்று கேட்பார்.  இது உன் அப்பாவுக்கு தெரியுமா என்று அண்ணா கேட்டால்,  தெரியும் என்று சொல்லிவிடுவார் .  அண்ணா தேதி கொடுத்த பின்னர் தான் தன் தந்தை கருணாநிதி இடம் அதை பற்றி சொல்லுவார்.    திமுகவின் வளர்ச்சியில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்று இளைஞர்களை சேர்த்துக்கொண்டு திமுகவுக்காக இப்படி பாடுபட ஆரம்பித்தார் ஸ்டாலின். 

 1980ல்  திமுகவின் இளைஞர் அணி தொடங்கப்பட்டது.   அந்த அமைப்பின் ஏழு அமைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் ஸ்டாலின்.  இதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்து திமுக இளைஞரணியை வலுப்படுத்தினார்.  இதன் பின்னர் 1983 ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தில் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக ஆனார்.  திமுக இளைஞர் அணிக்கு என்று சொந்த கட்டடம் வாங்குவதற்காக 11 லட்சம் ரூபாய் நிதி திரட்டி சென்னையில் அன்பகம் கட்டிடத்தை சொந்தமாக வாங்கி வெற்றி கொடி கட்டினார் ஸ்டாலின்.

ச்ட்

14 வயதில் அரசியலில் காலடி எடுத்து வைத்தவர் முதல்வராவதற்கு 54 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.  கலைஞர் மு. கருணாநிதியின் மகன் என்ற அடையாளம் மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு சாத்தியப்படுத்தவில்லை என்பதை உணர்த்தி இருக்கிறார்.   தமிழ்நாட்டின் முதல்வராக இன்று அவர் இருக்கிறார் என்றால் அதில் அரை நூற்றாண்டு கால அவரின் அரசியல் உழைப்பு அடங்கி இருக்கிறது. அதனால்தான்,  2021 மே 7 ஆம் தேதி அன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் போது  ‘’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..’’ என்று உச்சரித்தபோது அதுவரை இல்லாத உற்சாகத்தைப் பெற்றனர் அவரது கட்சியினர்.  அதுவரை இல்லாத உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டார் துர்கா ஸ்டாலின்.