5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.. அரசியல் தலைவர்கள் கருத்து

 

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் டிவிட்டரில், சீக்கிரம் நல்லது. பஞ்சாபின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பெருநாளுக்காக நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். கோவிட் தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் கடைப்பிடித்து, ஜனநாயகத்தின் திருவிழாவில் முழு மனதுடன் பங்கேற்குமாறு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

எஸ்.ஏ.டி. கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் தேர்தல் குறித்து கூறுகையில், பஞ்சாப் மக்கள் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு உறுதியளித்த வலுவான, நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த எஸ்.ஏ.டி.-பி.எஸ்.பி. அரசாங்கத்தை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். தற்போதைய ஆட்சியாளர்கள் சர்க்கஸ் நகைச்சுவையாக ஆட்சியை குறைத்து விட்டனர். அது முடிந்து விட்டது என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்று தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், மார்ச் 10ம் தேதி உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, பா.ஜ.க. மீண்டும் அமோக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹரிஷ் ராவத் கூறுகையில், உத்தரகாண்ட் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை காங்கிரஸ் எப்போதும் கடைப்பிடிக்கும் என்று தெரிவித்தார்.

ஹரிஷ் ராவத்

மணிப்பூர் முதல்வர் என். பைரன் சிங் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை வரவேற்கிறேன். சில விஷயங்களுக்கு கால அவகாசம் தேவைப்பட்டாலும், நாங்கள் வாக்குறுதியளித்ததை அரசு நிறைவேற்றியுள்ளது. நாங்கள் அறுதி பெரும்பான்மை பெறுவோம் என்று தெரிவித்தார்.