170 இடங்களில் களமிறங்கும் அதிமுக- பாஜகவுக்கு எத்தனை இடங்கள்?
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 17 தொகுதிகள், டிடிவி தினகரனின் அமமுகக்கு 9 தொகுதிகள், தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 234 தொகுதிகளில் அதிமுக 170 இடங்களில் நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், மீதமுள்ள 64 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு பகிரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த 64 தொகுதிகளில் பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றைத் தவிர்த்து மீதமுள்ள தொகுதிகள் புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, புரட்சி பாரதம், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும், சில சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி முடிவு தாமதமாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

