என் அப்பாவுக்கு எதிராக எவ்வளவு சூழ்ச்சிகள், அவமானங்கள் - ஓபிஎஸ் மகன் வேதனை

 
j

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்படும் சிக்கலான நேரங்களில் எல்லாம் தனது மனதில் பட்டதை சொல்லி  வருகிறார் அவரின் உதவியாளர் பூங்குன்றன்.  அப்படித்தான் அதிமுகவின் தற்போதைய நெருக்கடியான சூழலில்,  ‘’ஓபிஎஸ் மீண்டும் பரதன் ஆகிவிட்டாரா? அப்படி என்றால் இபிஎஸ் ராமன் ஆகிவிட்டாரா? விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்து மீண்டும் மீண்டும் தன்னை பரதன் என்று நிரூபித்து கொண்டிருக்கிற ஓபிஎஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்’’ என்று தெரிவித்திருந்தார்.

p

அவர் மேலும்,  ‘’ இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா?   எவ்வளவோ விட்டுக் கொடுத்த ஓபிஎஸ் அவர்கள், நீங்கள் எதை செய்தாலும் ஏற்றுக்கொண்டு வந்தார். உங்களது ஆசை என்னவென்று சொன்னால் ஓபிஎஸ் அவர்களிடம் பேசுவதற்கு நான் தயார். கழக நன்மைக்காக அவர் எதையும் விட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவர்களுக்குரிய அங்கீகாரத்தை கொடுத்து நீங்கள் ஒன்றுபட்டால், ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்பதே எல்லோருடைய நம்பிக்கை’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு ஓபிஎஸ் மகன் விப ஜெயபிரதீப் பதிலளித்துள்ளார்.  

’’அண்ணன் பூங்குன்றன் அவர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள் . தர்மத்தின் படி செயல்படும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பரதனாக விட்டுக் கொடுக்கலாம்.  ஆனால் தர்மத்திற்கு எதிராக செயல்படும் ஒரு சில தலைமை கழக நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இணங்க  விட்டுக் கொடுத்ததினால்  கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்சி எவ்வளவு பெரிய பாதாளத்திற்கு சென்று இருக்கிறது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும். 

j

நமது அம்மா அவர்கள் ஐயா ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பொறுப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் ஒரு முறை கூட பொறுப்பை ஐயா அவர்கள் சரியாக செய்யவில்லை என்று திரும்ப பெற்றதாக வரலாறு கிடையாது என்பது 18 ஆண்டுகளுக்கு மேல் அம்மாவிடம் பணியாற்றிய தங்களுக்கு நன்றாக தெரியும். 

ஐயா அவர்கள்  தனக்கென்று இந்த பதவி வேண்டும் இந்த பொறுப்பு வேண்டும் என்று தான் சார்ந்த தலைமையிடம் கேட்டு நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?  அவர் வகித்த பதவிகள் அனைத்தும் அவருடைய உழைப்பு விசுவாசத்தை பார்த்து தானாக வந்தது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும். 

உழைக்கும் உண்மை தொண்டனுக்கு அங்கீகாரம் என்பது தான் வகிக்கும் பதவியில் அல்ல மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையான அன்பில் தான் இருக்கிறது .  கட்சியிலும் ஆட்சியிலும் உயர்ந்த பதவியை அம்மா அவர்கள் வழங்கி விட்டார்கள் . அவர் விரும்புவது பதவியல்ல கழகம் ஒன்றுபட்டு வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான். 

கழக ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்ற பிறகு அந்தப் பதவியில் அவர் சுதந்திரமாக செயல்பட முடிந்ததா?  எவ்வளவு இடைஞ்சல்கள் , குறுக்கீடுகள் ,சூழ்ச்சிகள், அவமானங்கள், பொய் குற்றச்சாட்டுகள் இருந்தன என்பது தங்களுக்கு நன்றாக தெரியும். 

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ராணுவ கட்டுப்பாட்டு உள்ள கட்சியில் முதன்மை தொண்டராக  பணியாற்றியவர். ஐயா அவர்களிடம் முழு சுதந்திரத்துடன் கட்சியை கொடுத்துப் பாருங்கள்.    கழகம் அசுர வளர்ச்சியுடன் முன்னேறுவதை தாங்கள் காண்பீர்கள். கழக வளர்ச்சியே எங்களது லட்சியம்.
தங்களின் அன்புத்தம்பி, வி. ப ஜெய பிரதீப்.’’