இப்படிப்பட்ட அண்ணாமலை எப்படி தமிழ் மக்களைப் பற்றி கவலைப் படுவார்? கனிமொழி கேள்வி
அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதும் அதை அண்ணாமலை கண்டு கொள்ளாமல் இருந்ததும் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. கனிமொழி எம்பியும் இதில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் பத்தாம் தேதி அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக போராடி வருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதை அடுத்து அவர் கர்நாடக மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் .
இந்த நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் சிவமோகா நகரில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா , அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர் . அப்போது, தமிழர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் அவர்களின் வாக்கை பெற வேண்டும் என்கிற நோக்கில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது .
அப்போது எல்லோரும் எழுந்து நின்றனர் . திடீரென்று தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டார் ஈஸ்வரப்பா. கர்நாடக மாநில கீதத்தை பாட வைத்தார். தன் முன்னே தமிழ் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்ட போது அதை கண்டு கொள்ளாமல் இருந்த அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
’’தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்’’என்று கேட்கும் கனிமொழி எம்பி. #ApologiseAnnamalai என்ற ஹேஷ்டேக்கினையும் பகிர்ந்திருக்கிறார்.