பல ஆண்டுகளுக்கு முன் லாலு ஜி ஆரம்பித்து வைத்தார்.. பலர் அதனை தொடருகின்றனர்.. ஹேமமாலினி

 
ஹேமமாலினி

என் கன்னங்கள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன் லாலு ஜி பேசினார் பலர் அதனை தொடருகின்றனர் என்று மூத்த நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அமைச்சர் குலாப்ராவ் ரகுநாத் பாட்டீல் பேச்சு அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில்  குலாப்ராவ் ரகுநாத் பாட்டீல்,  30 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் எனது தொகுதிக்கு வந்து சாலைகளை பார்க்க வேண்டும். சாலைகள் ஹேமமாலினியின் கன்னங்கள் போல் இல்லையென்றால் நான் ராஜினாமா செய்வேன் என்று பேசியது தெளிவாக கேட்கிறது.

குலாப்ராவ் ரகுநாத் பாட்டீல்

சாலைகளை ஹேமாலினியின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசியதற்கு குலாப்ராவ் ரகுநாத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி ரூபாலி சாகங்கர் கூறுகையில், ஆணையம் இந்த கருத்தை கவனத்தில் எடுத்துள்ளது. அமைச்சர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் அவர் சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்தார். இதனையடுத்து அமைச்சர் குலாப்ராவ் ரகுநாத் பாட்டீல் கூறுகையில், நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் சத்ரபதி சிவாஜி மகாராஜை வணங்கும் சிவ சேனாவை சேர்ந்தவன். கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரை பெண்களை மதிக்க எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர்  என்று தெரிவித்தார்.

லாலு பிரசாத் யாதவ்

பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி இது தொடர்பாக கூறுகையில், நான் என் கன்னங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. இது போன்று பேசுவது பல ஆண்டுகளுக்கு முன் லாலுஜியால் தொடங்கப்பட்டது. பலர் இந்த டிரெண்டை பின்பற்றி வருகின்றனர். இதை செய்யக்கூடாது. இது போன்ற கருத்துகள் நல்ல விஷயமாக இல்லை. எந்த ஒரு பெண்ணையும் இது போன்று கருத்துகளை கூற கூடாது என்று தெரிவித்தார்.