அவருக்கு அரசியல் தெரியாது; அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - மாஜி முதல்வர் பரபரப்பு
நாங்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று சொல்லி பாஜகவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் குமாரசாமி.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜனதா தளம் எஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரை நடத்தி வருகிறார்.
இரண்டு கட்ட யாத்திரையை முடித்திருக்கும் அவர் உத்தரக்னடாவில் மூன்றாவது கட்ட பஞ்சரத்னா யாத்திரையை மேற்கொண்டு இருக்கிறார். குமரா நகரில் மூன்றாவது கட்ட யாத்திரையை தொடங்கியவர் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, நாங்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் இல்லை. ராமகிருஷ்ணன் ஹெக்டேவை முதல்வராகியது தேவேகவுடா. நான் முதல்வராக இருந்த போது அந்த சமூகத்திற்கு பெங்களூருவில் நிலம் ஒதுக்கி கொடுத்தேன். பிராமணர் மேம்பாட்டு ஆலயம் அமைக்கப்பட்டது . ஆனால், அந்த சமூகத்திற்கு பாஜக என்ன செய்து உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் அது குறித்து, எங்களுக்கு வீர சாவர்க்கர் கலாச்சாரம் தேவையில்லை. இந்து மதத்தை நாங்கள் பாதுகாத்திருக்கிறோம். ஆனால் இந்து மதத்தின் பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார்.
பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு அரசியல் தெரியாது. சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் எஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி வரும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். பாஜக இதை முடிவு செய்ய முடியாது என்றவர் , தேர்தல் நேரத்தில் சிலர் கட்சியை விட்டு விலக்குவதும் சிலர் வேறு கட்சிகளில் இருந்து வந்து சேர்வது என்பதும் சகஜமானது. இதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையே இல்லை என்றார்.