அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டதா? ஓபிஎஸ் பதிலளிக்க அவகாசம் வழங்கிய நீதிபதி
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதா இல்லையா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பாக இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது .
அப்போது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்ற நிலையில் , இந்த மனுக்கள் காலாவதி ஆகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓ . பன்னீர்செல்வம் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்து , அவரது தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதா என்பது குறித்து நிலுவையில் இருக்கும் மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என்று இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி .ஓ பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து விசாரணையை வரும் மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருகிறார்.