மக்கள் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காகவே மத தலங்கள் கட்டப்படுகின்றன.. மனோகர் லால் கட்டார்
மக்கள் அங்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காகவே மத தலங்கள் கட்டப்படுகின்றன என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
ஹரியானாவில் கடந்த சில மாதங்களாக சில இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் முஸ்லிம் சமூகம் திறந்த வெளியில் தொழுகை நடத்தும் இடங்களில் கூடி பாரத் மாதா கி ஜெய் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்புவதாகவும், திறந்த வெளி இடங்களில் முஸ்லிம்கள் நமாஸ் செய்வதற்கும் அவர்கள் தெரிவித்ததாக கூறுப்படுகிறது. இந்நிலையில் திறந்த வெளியில் தொழுகை நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. முஸ்லிம் கட்சிகள் இது போன்ற நடைமுறைகளில் ஈடுபடுவதன் மூலம் மற்றவர்களின் உரிமைகளில் அத்துமீறலில் ஈடுபட வேண்டாம் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

முதல்வர் மனோகர் லால் கட்டார் மேலும் கூறியதாவது: திறந்த வெளிகளில் தொழுகை நடத்துவதற்கு சில இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் முன் முடிவு திரும்ப பெறப்பட்டுள்ளது, மாநில அரசு இப்போது இந்த பிரச்சினைக்கு இணக்கமான தீர்வை உருவாக்கும். இங்கு (குர்கான்) திறந்த வெளியில் தொழுகை நடத்துவது பொறுத்துக் கொள்ளப்பபடாது. நாம் அனைவரும் சுமூகமான தீர்வை காண அமருவோம்.

அனைவருக்கும் (பிரார்த்தனை செய்ய) வசதி கிடைக்க வேண்டும். ஆனால் யாரும் மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது, அது அனுமதிக்கப்படாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று காவல்துறை மற்றும் துணை ஆணையரிடம் கூறியுள்ளோம். ஒருவடைய இடத்தில் யாரேனும் ஒருவர் தொழுகை நடத்தினால், வழிபாடு நடத்தினால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. மக்கள் அங்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காகவே மத தலங்கள் கட்டப்படுகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகளை திறந்த வெளியில் நடத்தக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


