டெல்லிக்கு வாங்க பேசிக்கலாம்.. ஹரிஷ் ராவத்தை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் காங்கிரஸ் மேலிடம்

 
ஹரிஷ் ராவத்

ஹரிஷ் ராவத் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியதையடுத்து, வரவிருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இன்று டெல்லிக்கு வரும்படி, அவருக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் நேற்று முன்தினம் டிவிட்டரில், காங்கிரஸ் கட்சி தலைமை மீதான தனது அதிருப்தியை  கொட்டியிருந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, வரவிருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க டெல்லிக்கு வரும்படி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத்துக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. 

கணேஷ் கோடியல்

இந்த செய்தியை அந்த கட்சி வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. ஹரிஷ் ராவத் இன்று டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். ஹரிஷ் ராவத்துடன், உத்தரகாண்ட் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் பிரீதம் சிங், உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் மற்றும் மூத்த தலைவர் யாஷ்பால் ஆர்யா ஆகியோரும் இன்று டெல்லி சென்று கட்சி தலைமை சந்தித்து பேச உள்ளனர்.  

காங்கிரஸ்

ஹரிஷ் ராவத் நேற்று முன்தினம் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான டிவிட்டுகளில்,  இது விசித்திரமாக இல்லையா? இந்த தேர்தல் கடலில் நாம் நீந்த வேண்டும், ஆனால் என்னை ஆதரிப்பதற்கு பதிலாக, அந்த அமைப்பு என்னை புறக்கணித்துள்ளது அல்லது எதிர்மறையான பாத்திரத்தை வகிக்கிறது. நாம் செல்ல வேண்டிய கடலில் பல முதலைகளை அதிகாரங்கள் (தலைமை) அவிழ்த்து விட்டன. நான் யாரை பின்பற்ற வேண்டுமோ, அந்த மக்கள் என் கை கால்களை கட்டிவிட்டார்கள். நான் யோசித்து கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு வழியைக் காட்டும் என்று நம்புகிறேன். கடவுள் கேதார்நாத் (சிவன்) எனக்கு வழி காட்டுவார் என்று நான் நம்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.