ஹரிஷ் ராவத் போட்ட டிவிட்டர் குண்டு.. காங்கிரசில் வெடித்தது புதிய பிரச்சினை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹரிஷ் ராவத் கட்சி தலைமை தன்னை கை விட்டது போல் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தற்போது நேரம் சரியில்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் என பல மாநிலங்களில் உட்கட்சி மோதலால் காங்கிரஸ் திணறி வருகிறது. தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் பூகம்பம் வெடித்துள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஹரிஷ் ராவத். இவர் காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். இப்படிப்பட்ட ஹரிஷ் ராவத் தற்போது காங்கிரஸ் தலைமை தன்னை கை விட்டது போல் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரிஷ் ராவத் தான் மகிழ்ச்சியற்றவராகவும், தனது எதிர்காலம் குறித்து சிந்திப்பதையும் தெளிவாக கூறியுள்ளார். ஹரிஷ் ராவத் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இது விசித்திரமாக இல்லையா? இந்த தேர்தல் கடலில் நாம் நீந்த வேண்டும், ஆனால் என்னை ஆதரிப்பதற்கு பதிலாக, அந்த அமைப்பு என்னை புறக்கணித்துள்ளது அல்லது எதிர்மறையான பாத்திரத்தை வகிக்கிறது. நாம் செல்ல வேண்டிய கடலில் பல முதலைகளை அதிகாரங்கள் (தலைமை) அவிழ்த்து விட்டன.
நான் யாரை பின்பற்ற வேண்டுமோ, அந்த மக்கள் என் கை கால்களை கட்டிவிட்டார்கள். நான் யோசித்து கொண்டிருக்கிறேன். ஹரிஷ் ராவத், அது வெகுதூரம் போய் விட்டது, நீங்கள் செய்தது போதும், ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது. அப்போது தலையில் ஒரு குரல் ஒலிக்கிறது, நான் பலவீனமானவனும் இல்லை, சவால்களில் இருந்து ஒடமாட்டேன். நான் கலக்கத்தில் இருக்கிறேன். புத்தாண்டு எனக்கு வழியைக் காட்டும் என்று நம்புகிறேன். கடவுள் கேதார்நாத் (சிவன்) எனக்கு வழி காட்டுவார் என்று நான் நம்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார். ஹரிஷ் ராவத்தின் இந்த பதிவு காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.