ஏலத்துக்கு வந்த விவசாயி நிலம்.. விவசாயிகளுக்கு ஆதரவான காங்கிரஸின் உண்மையான முகம் இதுதானா?.. பா.ஜ.க.

 
காங்கிரஸ்

ராஜஸ்தானில் விவசாயி நிலம் ஏலத்துக்கு வந்த விவகாரத்தில், விவசாயிகளுக்கு ஆதரவான காங்கிரஸின் உண்மையான முகம் இதுதானா? என்று மத்திய அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் ஒரு விவசாயி தனது நிலத்தை அடமானம் வைத்து கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் அந்த விவசாயி எதிர்பாராத விதமாக இறந்து விட்டார். இதனால் கூட்டுறவு வங்கியில் அவர் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த தவறியதால், கூட்டுறவு வங்கி அந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்து அதை ஏலத்துக்கு கொண்டு வந்தது. 

ஹர்தீப் சிங் பூரி

விவசாயின் நிலம் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. விவசாயின் நிலம் ஏலத்துக்கு வந்தது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், விவசாயிகளுக்கு இந்த வாக்குறுதி என்ன? ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு ஆதரவான காங்கிரஸின் உண்மையான முகம் இதுதானா? என்று கேள்வி எழுப்பினார்.

கடன்

அதேசமயம் கூடுதல் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், வங்கியின் கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயின் நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, விவசாயிக்கும் (இறந்த விவசாயின் குடும்பம்), வங்கிக்கும் இடையே தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.