உத்தரகாண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு
உத்தரகாண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டில் 70 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த ஹரக் சிங் ராவத்தை அமைச்சரவையிலிருந்து பா.ஜ.க. அதிரடியாக நீக்கியது. மேலும் கட்சியிலிருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.
ஹரக் சிங் ராவத் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் எதிர்வரும் உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தனது மகளுக்கு சீட் கேட்டதால் ஹரக் சிங் ராவத் கட்சியலிருந்து நீக்கப்பட்டார் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று ஹரக் சிங் ராவத் தெரிவித்தார்.
ஹரக் சிங் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், இவ்வளவு பெரிய முடிவை ( அமைச்சரவையிலிருந்து மற்றும் கட்சியிலிருந்து நீக்கம்) எடுப்பதற்கு முன்பு கட்சி என்னிடம் ஒரு முறை கூட பேசவில்லை. சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். 2016ல் உத்தரகாண்டில் முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து பா.ஜ.க.வுக்கு தாவிய 10 எம்.எல்.ஏ.க்களில் ஹரக் சிங் ராவத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.