ஹரிஷ் ராவத் எனது மூத்த சகோதரர்.. அவரிடம் 100 முறை கூட மன்னிப்பு கேட்பேன்.. முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்

 
ஹரக் சிங் ராவத்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் எனது மூத்த சகோதரர் அவரிடம் 100 முறை கூட மன்னிப்பு கேட்பேன் என்று மறைமுகமாக காங்கிரஸ் கட்சியில் சேர தயாராக உள்ளதாக பா.ஜ.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட ஹரக் சிங் ராவத் தெரிவித்தார்.

உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த ஹரக் சிங் ராவத்தை அமைச்சரவையிலிருந்து  பா.ஜ.க. அதிரடியாக நீக்கியது. மேலும் கட்சியிலிருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். இதனையடுத்து ஹரக் சிங் ராவத் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. 

ஹரிஷ் ராவத்

மேலும், எதிர்வரும் உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று ஹரக் சிங் ராவத் நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று பா.ஜ.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட ஹரக் சிங் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் (காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத்) எனது மூத்த சகோதரர் நான் அவரிடம் நூறு முறை மன்னிப்பு கேட்க முடியும். உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சியை நான் விரும்புகிறேன். இன்று (நேற்று) காலையில் அவர்களுடன் (காங்கிரஸார்) பேசினேன். 

காங்கிரஸ்

அவர்கள் விரைவில் தங்கள் முடிவை எனக்கு தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் நான் எனது முடிவுகளை எடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆக, காங்கிரஸ் கட்சியில் ஹரக் சிங் ராவத்தை சேர்த்துக் கொள்ள அந்த கட்சியின் மேலிடம் சம்மதம் தெரிவித்தால், அவர் உடனடியாக காங்கிரஸில் சேர்ந்து கொள்வார் என பேசப்படுகிறது.