தொடரும் எட்டப்படாத முடிவு.. குழப்பத்தில் மாணவர்கள்.. முடிவை விரைந்து எடுங்கள்.. - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..

 
ஜிகே வாசன்

கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அரசியல் தலையீடானது கால தாமதத்தை ஏற்படுத்தினால், மாணவர்களின் வருங்கால கல்வி பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ நீட் தேர்வுக்கு ஒரு இறுதியான முடிவு விரைவில் கிடைக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்டமசோதாவை, சபாநாயகர் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக ஆளுநர் அவர்கள் சட்டமசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார். நீட் தேர்வு சம்பந்தமாக தொடரும் எட்டப்படாத முடிவினால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.

நீட் விலக்கு

ஒன்று நீட் தேர்வு சம்பந்தமாக சட்டமசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒரு காலக்கெடுவிற்குள் முடிவு ஏற்படுத்த வேண்டும். அல்லது  நீட் தேர்வு சம்பந்தமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெளிவுகிடைக்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக கிடைக்கக்கூடிய முடிவானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

குழப்பத்தில் மாணவர்கள்

பொதுவாக கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அரசியல் தலையீடானது கால தாமதத்தை ஏற்படுத்தினால் மாணவர்களின் வருங்கால கல்வி பாதிக்கும், நாட்டின் முன்னேற்றமும் பாதிக்கும். எனவே நீட் தேர்வு சம்பந்தமாக ஒரு நல்ல முடிவு விரைவில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை நீக்கி, மாணவர்களின் முறையான கல்வி வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.