குட்பை! நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன் - எச்.ராஜா அறிவிப்பு

 
ஹ்

நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்.  ஆனால் சிவகங்கை தொகுதியில் பாஜக தான் போட்டியிடும் என்று அழுத்தமாக சொன்னார் தமிழக பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார் எச். ராஜா.   அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் எச். ராஜா இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில்,  அவர் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

ஹ்

 தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா.  இவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்.  பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஆவார்.  பாஜகவில் இருந்து ஆளுநர்களாகும் பட்டியலில் அடிக்கடி  எச்.  ராஜாவின் பெயரும் இடம் பெற்று வருகிறது. 

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு சிவகங்கையில்  நடந்த நிர்வாகிகள்  கூட்டத்தில் எச். ராஜா பங்கேற்று பேசினார்.   அப்போது,   வாரம் தோறும் கிளை கூட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.  மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்திட வேண்டும் என்று கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார்.

 தொடர்ந்து பேசிய எச். ராஜா,   உலகிலேயே 23 ஆண்டுகள் தொடர்ந்து நிர்வாகத்தை ஆட்சி செய்கின்ற ஒரே அரசியல் தலைவர் மோடி தான் என்று பெருமிதத்துடன்  சொன்னார்.

 பின்னர் அவர் சொன்னதுதான் கூட்டத்தில் இருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.   நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்.  ஆனால் சிவகங்கை மக்களவைத் தொகுதியில்  பாஜக தான் போட்டியிடும் . அதனால் இப்போதே தேர்தல் பணியில் தொடங்க வேண்டும் என்று அறிவித்தார்.

 சிவகங்கை தொகுதியில் மீண்டும் எச். ராஜா போட்டியிடுவார் என்ற பேச்சு இருக்க,  இத்தொகுதியை அதிமுகவும் குறி வைத்திருக்கிறது.   தான் போட்டியிடப் போவதில்லை;  அதே நேரம் பாஜகவை சேர்ந்தவர்தான் இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்திருக்கிறார்.   எச்.ராஜாவின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.