பாலியல் மோசடி குற்றச்சாட்டு.. கோவா பா.ஜ.க. அமைச்சர் ராஜினாமா
கோவாவில் அமைச்சர் மிலிந்த் நாயக் மீது பாலியல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் மிலிந்த் நாயக். இவர் பாலியல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதனையடுத்து அமைச்சர் மிலிந்த் நாயக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோதங்கர் நேற்று கூறுகையில், மிலிந்த் நாயக் தனது அமைச்சரவை உறுப்பினர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒர பெண்ணிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டார். முதல்வர் சாவந்த் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் மிலிந்த் நாயக்குக்கு எதிரான குற்றச்சாட்டை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக அமைச்சர் மிலிந்த் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மிலிந்த் நாயக் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதை முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் கூறுகையில், சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக மிலிந்த் நாயக் கோவா அரசாங்கத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.


