எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மைக்கேல் லோபா.. அதிர்ச்சியில் கோவா பா.ஜ.க.

 

கோவாவில் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சராக இருந்த பா.ஜ.க.வின் மைக்கேல் லோபா நேற்று தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார்.

கோவாவில் 40 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மைக்கேல் லோபா நேற்று தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் அலுவலகம் மற்றும் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை மைக்கேல் லோபா வழங்கினார். மேலும், அவர் பா.ஜ.க.விலிருந்து விலகினார்.

பிரமோத் சாவந்த்

இது தொடர்பாக மைக்கேல் லோபா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்து விட்டேன். பா.ஜ.க.விலிருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை நான் பார்க்கிறேன். மற்ற அரசியல் கட்சிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். எங்களை பார்த்த விதம் மற்றும் கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பா.ஜ.க.

ஆளும் பா.ஜ.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை முன்னெடுத்து செல்லவில்லை. அவரை (மனோகர் பாரிக்கர்) ஆதரித்தவர்கள் பா.ஜ.க.வால் ஒரங்கட்டப்பட்டுள்ளனர். பா.ஜ.க. இனி சாமானியர்களின் கட்சி அல்ல என்று வாக்காளர்கள் என்னிடம் சொன்னார்கள். அடிமட்ட தொண்டர்கள் கட்சியால் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மைக்கேல் லோபா பா.ஜ.க.விலிருந்து விலகியது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.