அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த ஜி.கே.வாசன்! அமைச்சர்கள் அதிர்ச்சி

 
gk vasan

ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்காத அ.தி.மு.க. என கூறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேச்சால், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும், கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தென்னரசை ஆதரித்து, ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. தர்மம் வெற்றிபெற அதிமுகவை ஆதரிக்க வேண்டும். மக்கள் நல திட்டங்களை முடக்கிய பெருமை தி.மு.க வையே சாரும். இந்த இடைத்தேர்தலை யாரும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாரதவிதமான தேர்தல் ஆகும். சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு அதிமுக கூட்டணி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதார உயர்விலே இஸ்லாமியர்கள் பங்கு மிகப்பெரியது. இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் குரல் கொடுக்க கூடிய அரசு அ.தி.மு.க., அல்ல...  குரல் கொடுப்பது த.மா.கா. தான்” என பேசினார். 

ஜி.கே.வாசனின் பேச்சால், அருகில் இருந்த இருந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ் ஆகியோர் அதிர்ச்சி அடைந்து சில நிமிடம் திகைப்பிலேயே இருந்தனர். தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன், இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

பிரச்சாரத்தில் அதிமுக, தமாக கொடிகளுடன் தொண்டர்கள் வந்திருந்தனர். கூட்டணியில் உள்ள பாஜக நிர்வாகிகளோ, அக்கட்சியின் கொடிகளோ கூட்டத்தில் இல்லை..