காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது முதல்வரை எம்.எல்.ஏ.வாக ஆக்குவது போன்றது.. குலாம் நபி ஆசாத் தாக்கு

 
குலாம் நபி ஆசாத்

காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தியது முதல்வரை எம்.எல்.ஏ.வாக ஆக்குவது போன்றது என்று மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குல்காமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் குலாம் நபி ஆசாத் பேசுகையில் கூறியதாவது: வழக்கமாக யூனியன் பிரதேசங்கள் மாநிலமாக தரம் உயர்த்தப்படும். ஆனால் நம் விஷயத்தில் மாநிலம், யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தப்பட்டது.

காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம்

இது டிஜி.பி.யை காவல் நிலைய ஆய்வாளர் பதவிக்கும், முதல்வர் பதவியை எம்.எல்.ஏ.வாகவும், தலைமை செயலாளரை ஒரு கிராம கணக்காளராகவும் தரம் தாழ்த்துவது போன்றது. எந்த அறிவாளியும் இதை செய்ய முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த அக்டோபரில் ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, எல்லை நிர்ணய செயல்முறை முடிந்து தேர்தல் நடத்தப்பட்ட பிறகு, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கி வந்த சட்டபிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரசேதங்களாக பிரித்தது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து, காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.