பழனிச்சாமியே வெளியேறு!வெளியேறு! அதிமுகவில் சலசலப்பு

 
p

 பழனிச்சாமியே வெளியேறு! வெளியேறு! என்று சேலம் மாநகர் முழுவதும் பரபரப்பு  போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதால்  அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான தினேஷ் பெயரில் சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன .  அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு  கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

‘’ கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் அதிமுகவின் தொடர் தோல்வியை பெற்று தந்த எடப்பாடி பழனிச்சாமியை கண்டிக்கிறோம்!  தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்த இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பழனிச்சாமியே வெளியேறு வெளியேறு!  அம்மா அவர்களின் கழக நிரந்தர பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்த பழனிச்சாமியே வெளியேறு!  தொண்டர்களை மதிக்காத பழனிசாமியே வெளியேறு!   இன்று கட்சியை அடியோடு அழித்துக் கொண்டிருக்கும் பழனிச்சாமியே கழகத்தை விட்டு வெளியேறு வெளியேறு! - இவன் அம்மாவின் உண்மை விசுவாசி,  சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர், கழக எளிய தொண்டன் சேலம் என். தினேஷ் ’’என்று அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

po

 இந்த போஸ்டர்கள் குறித்து தினேஷ்,   ’’அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.  கட்சியினரும் பிரிந்து இருப்பதால் தொண்டர்கள் மத்தியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.   தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அதிமுக வலிமையாக இருக்கும்.   பழனிச்சாமி பிரிந்து போனவர்கள் யாரையும் சேர்க்காமல் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறார் .  ஒற்றுமைக்கான வழியை அவர் விரும்புவதில்லை.   இதனால் தான் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது’’என்று விளக்கம் அளித்து இருக்கிறார் .

இதனால்,  சேலம் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தினேஷின் வீட்டை சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர்  வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர் முற்றுகை இட சென்றுள்ளார்கள்.   தினேஷ் வீட்டில் இல்லாததால் கலைந்து சென்றிருக்கிறார்கள்.

 பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று தினேஷ் மீது புகார் அளித்துள்ளனர்.  அந்த புகாரில் பழனிச்சாமியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் தினேஷ் அவதூறு செய்திகளை போஸ்டர்  ஒட்டி இருக்கிறார்.  இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்ற செயல் . அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.  இந்த  விவகாரம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.