பாஜக பாலியல் கட்சி; திமுக, விசிகவில் இணைய தயார்- காயத்ரி ரகுராம்

 
gayathri-4

தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது பேசிய அவர், “பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து விசாரணை செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால் எந்த விசாரணையும் இல்லாமல் பொறுப்பில் இருந்து எப்படி நீக்கமுடியும்? அண்ணாமலை எனக்கு ஆதரவாக பேசவில்லை. 2 மாதத்தில் 3 பெண்கள் பாதிக்கப்பட்டோம். பெட்ரூம்ல கேமரா வைக்கிறது கேவலம். அலிஷாவுக்கு கொடுத்த ஆதரவை எனக்கு கொடுக்கவில்லை. என்னைப்பற்றி வீடியோ, ஆடியோ இருக்கு என சொல்கிறார்கள். அதனை போலீசில் ஒப்படைக்க வேண்டியதுதானே? மிரட்டல் விடுக்கும் வகையில் மெசேஜ் செய்கிறார்கள். வார் ரூம் மூலம் தன்னை பற்றி அவதூறாக பேசுகின்றனர்.  8 ஆண்டுகளாக பாஜகவில் உழைத்திருக்கிறேன். 2 வருடம் இருந்தவர்களுக்கு ஒரு நியாயம்? 8 வருடம் இருந்தவர்களுக்கு ஒரு நியாயமா? ஒரு தலைவரே பாஜக நிர்வாகியை பற்றி 150 பேர் முன்னிலையில் தவறாக பேசுகின்றனர்.

மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன். என்னுடைய அரசியல் பயணம் தொடரும். திமுகவில் சேர்வதற்கு தகுதி வேண்டும். அது ஒன்றும் பாலியல் கட்சி பாஜக அல்ல திராவிட கட்சி. என்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார். என் அப்பாவுக்கு பிறகு மோடி அவர்களை தான் நான் என் அப்பாவாக பாக்குறேன். என்னை எப்படி பாஜகவில் இருந்து துரத்தலாம் என திட்டமிடுகின்றனர். என் பாதுகாப்பு பற்றி பாஜகவில் யோசிக்கவில்லை. தவறு இல்லையெனில் என்னிடம் நேரடியாக அமர்ந்து அண்ணாமலை பேச வேண்டும். அதுதான் நல்ல தலைவருக்கு அழகு. பாஜக நிர்வாகியாக இருக்கும் தனக்கு மரியாதை கொடுக்க வேண்டுமா? நான் பதவியில் இருந்து விலக 100% அண்ணாமலைதான் காரணம்” எனக் கூறினார்.