சித்துவின் குழந்தைகள் ராணுவத்தில் இருந்திருந்தால் இம்ரான் கானை சகோதரர் என்று அழைத்திருப்பாரா?.. பா.ஜ.க.

 
நவ்ஜோத் சிங் சித்து

சித்துவின் குழந்தைகள் ராணுவத்தில் இருந்திருந்தால் இம்ரான் கானை மூத்த சகோதரர் என்று அழைத்திருப்பாரா? என்று பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடந்த சனிக்கிழமையன்று பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்றார். அங்கு பாகிஸ்தான் அதிகாரி ஒருவரிடம் இம்ரான் கான் எனக்கு மூத்த சகோதரர் என்று பெருமையாக பேசினார். இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது, இந்த விவகாரத்தில் சித்துவையும்,காங்கிரஸையும் பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. தற்போது, சித்து தனது குழந்தைகள் ராணுவத்தில் இருந்திருந்தால் இம்ரான் கானை மூத்த சகோதரர் என்று அழைத்திருப்பாரா? என்று கவுதம் காம்பீர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கவுதம் காம்பீர்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் காம்பீர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவ்ஜோத் சிங் சித்து தனது குழந்தைகளை எல்லைக்கு அனுப்ப வேண்டும். அவருடைய குழந்தைகள் ராணுவத்தில் இருந்திருந்தால், அவர் இம்ரான் கானை கர்தார்பூர் சாஹிப்பில் அவரது மூத்த சகோதரர் என்று அழைத்திருப்பாரா?. சித்துவின் இதைவிட வெட்கக்கேடான அறிக்கை இருக்க முடியாது. அவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வாவை கட்டிபிடிக்கிறார், கர்தார்பூர் சாஹிப் சென்று இம்ரான் கானை தனது மூத்த சகோதரர் என்று அழைக்கிறார். கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீரில் 40 பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவர் அதை பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அவர் இந்தியாவை காக்க விரும்பும் மக்களுக்கு எதிராக அவர் செல்கிறார். 

இம்ரான் கான்

கேப்டன் அமரீந்தர் சிங் இந்தியாவை பாதுகாக்க விரும்பும்போது, நாட்டை பற்றி பேசும்போது, சித்து ஒத்துழைக்கவில்லை. இதை விட வெட்கக்கேடு என்ன வேண்டும்? அவர் எப்படிப்பட்ட அரசியல் செய்கிறார் என்பதை நாடு புரிந்து கொள்ளும் என நம்புகிறேன். அவர் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் பிரதமருக்கு எதிராக பேசுகிறார். நவ்ஜோத் சிங் சித்து சொல்வதை மக்கள் பொருட்படுத்துவதில்லை. சித்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாகிஸ்தானுக்கு செல்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.