நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சிக்கோ, அரசாங்கத்திற்கோ, ஒரு பிரதமருக்கோ சொந்தமானது அல்ல... காங்கிரஸ்

 
காங்கிரஸ்

தேசிய சின்னம் திறப்பு நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் அழைக்கப்படாததை குறிப்பிட்டு, நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சிக்கோ, அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு பிரதமருக்கோ சொந்தமானது அல்ல என மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியது.

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். தேசிய சின்னம் திறப்புக்கு முன்னதாக நடைபெற்ற பூஜைகளிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தேசிய சின்னத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸின் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் கூறியதாவது: நாட்டில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுவது நல்லது. ஆனால் நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்களையும் மத்திய அரசு அழைக்க வேண்டும். 

சந்தீப் தீட்சித்

நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சிக்கோ, அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு பிரதமருக்கோ சொந்தமானது அல்ல. இது (நாடாளுமன்றம்) ஜனநாயகத்தின் கோயில். அது ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவர்/அவள் இணைந்திருக்கும் கட்சிக்கும் சொந்தமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.