திருமண வயதை உயர்த்தினால் பெண் முரட்டுத்தனமாக மாறிவிடுவாள் என்பது தலிபானி மனநிலை.. முக்தர் அப்பாஸ் நக்வி

 
பெண்ணின் திருமண வயது 21

திருமண வயதை உயர்த்தினால் பெண் முரட்டுத்தனமாக மாறிவிடுவாள் என்பது தலிபானி மனநிலை என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் பெண்களின் சட்டப்பூர்வமான திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  இதற்கான மசோதாவை நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசனை செய்துள்ளதாக தகவல். அதேசமயம் பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முக்தர் அப்பாஸ் நக்வி

பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தலிபான் மனநிலை என்று மத்திய அமைச்சர் சாடியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற சிறுபான்மை தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசுகையில் கூறியதாவது: பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்தினால், ஒரு பெண் முரட்டுத்தனமாக மாறிவிடுவாள் என்று சிலர் நினைத்து, இந்த முடிவை (திருமண வயது உயர்த்துதல்) குறை கூறுவதை அறிந்து நான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன்.

திருமணம்

இந்த வகையான சிந்தனை செயல்முறையை இந்துஸ்தானி சிந்தனை என்பதை விட தலிபானி மனநிலை என்று மட்டுமே குறிப்பிட முடியும். இந்தியாவில் பெண்களுக்கு கல்வி அதிகாரத்துடன் சமூக அதிகாரம் தேவை. இந்த நாட்டில் ஒரு பெண்ணின் அரசியலமைப்பு உரிமைகள், பெண்கள் அதிகாரம், பெண்களின் மரியாதை ஆகியவை தலிபானி மனநிலையால் பாதிக்கப்படக்கூடாது. இந்த நாடு அரசியலமைப்பு கொள்கையின்படி இயங்குகிறது. இஸ்லாமிய நாடுகள் உள்பட பல நாடுகள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திருமண விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.