அரசாங்கத்தின் கர்வத்தை உடைக்க எல்லா நேரங்களிலும் தயாராக இருக்கிறார்கள்.. விவசாயிகள் அமைப்பு எச்சரிக்கை

 
விவசாயிகள் போராட்டம்

வேளாண் சீர்த்திருத்த சட்டங்கள் மீண்டும் கொண்டுவருவோம் என்று மத்திய அமைச்சர் மறைமுகமாக கூறியதற்கு, அரசாங்கத்தின் கர்வத்தை உடைக்க எல்லா நேரங்களிலும் தயாராக இருக்கிறார்கள் என்று விவசாயிகள் அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.


மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடந்த வெள்ளிக்கிழமையன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது:  விவசாய திருத்த சட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் சிலருக்கு இந்த சட்டங்கள் பிடிக்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு கொண்டு வந்த ஒரு பெரிய சீர்திருத்தம் இது.

பிரதமர் மோடி

ஆனால் (விவசாயிகளின் எதிர்ப்பால் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது) அரசு ஏமாற்றம் அடையவில்லை. ஒரு படி பின்வாங்கினோம். முன்னோக்கி செல்வோம். ஏனென்றால் விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு, முதுகெலும்பு வலுவாக இருந்தால்தான் நாடும் வலுவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதாவது வேளாண் சீர்த்திருத்தங்களை மீண்டும் கொண்டு வருவோம் என்று மத்திய அமைச்சர் மறைமுகமாக தெரிவித்தார். இதற்கு விவசாயிகள் அமைப்பு கடுமையான பதிலடியை கொடுத்துள்ளது.

நரேந்திர சிங் தோமர்
விவசாயிகள் அமைப்புகளின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் கணக்கில், அரசாங்கம் ஒரு படி பின்வாங்கி ஒரு மாபெரும் பாய்ச்சலை எடுக்கும் என்று பா.ஜ.க. அரசு நினைத்தால், அது முழு அபத்தம். குறைந்தபட்ச ஆதரவு விலை உள்பட அனைத்து பிரச்சினைகளிலும் விவசாயிகளும், விவசாயி சங்கங்களும் ஒருங்கிணைந்து உள்ளன. அரசாங்கத்தின் கர்வத்தை உடைக்க எல்லா நேரங்களிலும் தயாராக இருக்கிறார்கள் என்று விவசாய அமைப்புகள் பதிவு செய்துள்ளது.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில், பிரதமர் நரேந்திர மோடியின் மன்னிப்பை நாட்டின் வேளாண் துறை அமைச்சர் அவமதித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.  மீண்டும் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், மீண்டும் அன்னதாதாக்களின் (விவசாயிகள்) சத்தியாகிரகம் நடைபெறும். விவசாயிகள் ஆவணத்தை தோற்கடித்தார்கள். மீண்டும் அதை முறியடிப்பார்கள் என்று பதிவு செய்து இருந்தார்.