சில எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்தது - ஏகப்பட்ட மகிழ்ச்சியில் எடப்பாடி
அதிமுகவை முடக்க நினைத்த திமுகவின் பி டீம் ஆக இருந்து செயல்பட்ட சில எட்டப்பர்களின் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஏகப்பட்ட மகிழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .
எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கிய பட்டிருக்கிறது .
இதை அடுத்து எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர் . மதுரை திருமங்கலத்தில் நடந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி . உதயகுமார் இல்ல திருமண விழாவில் பங்கேற்று 51 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது மேடையில் பேசிய போது, ’’இன்றைக்கு அருமையான நாள். இந்த நாளில் நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் இடமும் ஜெயலலிதாவிடமும் வேண்டிக் கொண்டேன். இந்த இரு பெரும் பெரிய தலைவர்கள் அருள் கொடுத்த சில நிமிடங்களிலேயே அற்புதமான செய்தி வந்திருக்கிறது. இது சக்தி மிக்க தலைவர்கள் கொடுத்த வரப்பிரசாதம்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி, ‘’ நம் தலைவர்கள் தெய்வ சக்தி மிக்கவர்கள். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கின்றோம் . ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களை காக்கும் தீர்ப்பையே வழங்குவேன் என சொல்லி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அரங்குக்கு சென்ற போது இந்த தகவலை சொல்கிறார்கள். அதிமுகவை தோற்றுவித்த போது திமுக ஒரு தீய சக்தி அதை அழிக்க உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இது என்றார் எம்ஜிஆர் . அவரது இறுதி மூச்சு உள்ளவரை திமுகவை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் எம்ஜிஆர். அவரது வழித்தோன்றலாக வந்தார் ஜெயலலிதா, அதையே செய்து காட்டினார்.
அதிமுகவை முடக்க நினைத்த சில எட்டப்பர்கள் திமுகவின் பி டீம் ஆக இருந்து செயல்பட்டவர்கள் முகத்திரை எல்லாம் இன்று கிழிக்கப்பட்டிருக்கின்றன. ஆறு , ஏழு மாதங்களாக அதிமுக நிர்வாகிகள் ,தொண்டர்கள் பட்ட துன்பமும் வேதனையும் எண்ணில் அடங்காதவை . அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை என்றெல்லாம் குரல் எழுப்பினார்கள் எதிர்க்கட்சிகள் . இதற்கெல்லாம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு முடிவு கட்டிவிட்டது’’ என்றார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘’ கடந்த ஏழு மாதங்களாக எங்கள் கட்சியை வைத்து ஊடகமும் பத்திரிகையும் நடத்தப்பட்டு இருக்கிறது. போதும் , இனி அதிமுக நாட்டு மக்களுக்கான இயக்கம் என்பதை தெரிவியுங்கள்’’ என்றார். ’’மதுரை மண்ணை மிதித்தாலே அதிமுகவுக்கு நல்ல செய்தியும் வெற்றி செய்தியும் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் திருமங்கலத்தில் இருக்கும் ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோயிலில் வேண்டியதும் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த கோயில் மூலமாகத்தான் அதிமுக தொண்டர்களுக்கு இன்று உயிரோட்டப்பட்டு இருக்கிறது ’’என்றார் .
’’இதேபோன்று அடுத்த தீர்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்றார் என்று இனிப்பான செய்தி கிடைக்கும். அதிமுக வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ’’என்றார்.