தன்னைத்தானே ரசித்த மாஜி! கலாய்த்த துரைமுருகன்

 
d

கேள்வி கேட்காமல் லைவ் ஸ்ட்ரீமிங்கின்போது தன்னைத்தானே ரசித்துக் கொண்டிருந்த மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் துரைமுருகன் கலாய்த்தபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டமன்றத்தில் பேரவை உறுப்பினர்கள் பேசுவதை லைவ் ஸ்ட்ரீமிங் என்கிற முறையில் பேரவையின் உள்ளேயே அமைக்கப்பட்டு இருக்கும் தொடுதிரையில் பார்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  அது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.  பேரவையில் வினா விடைகள் நேரத்தின் போது , அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டம் குறித்து துணை கேள்வி கேட்க முயன்றார் .

ds

இதற்காக அவர் எழுந்து நின்றபோது அவரது புகைப்படம் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தொடுதிரையில் ஒளிபரப்பானது.   திரையில் தனது புகைப்படத்தை பார்த்ததும் கேள்வி கேட்காமல் மெய்மறந்து தன்னைத்தானே ரசித்துக்கொண்டிருந்தார் திண்டுக்கல் சீனிவாசன்.  ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட அவர்,  அதை சமாளிக்கும் படி,  என் படம் மட்டுமல்லாமல் உங்கள் படமெல்லாம் வந்திருக்கிறது . எனக்கு பக்கமாக இருப்பதால் நன்றாக தெரிகிறது.  இன்றைக்கு தான் அறிவித்தீர்கள். அதற்குள் என் படமும் வந்திருக்கிறது.  அருமையான வேலை செய்து இருக்கிறார் பேரவை தலைவர். நன்றி என்றார்.

 இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,  திண்டுக்கல் சீனிவாசனுக்கு கேள்வி கேட்பதில் இருந்த ஆர்வத்தை விட,  தன்னை டிவியில் பார்ப்பதில் தான் அதிக ஆர்வம் இருந்ததை பார்க்க முடிந்தது என்று சொன்னார். 

 அமைச்சர் இப்படிச் சொன்னதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.