அம்மா உணவகங்களை மூடினால், அதிமுக சும்மா இருக்காது - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்...

 
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் 500 சமுதாய உணவகங்கள் ’கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சங்கரபாண்டி அறிவித்திருந்தார்.  இதற்கு அதிமுவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கெனவே ,  அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது எனவும்,  அரசியல் காழ்புணர்ச்சி நடவடிக்கை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்  கண்டனம் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அம்மா உணவகத்தை மூடினால் அதனைப் பார்த்டுகொண்டு சும்மா இருக்க மாட்டோம் என காட்டமாக பதிலளித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான விருப்ப மனு அதிமுக தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டு வருகிறது.  ராயபுரம் திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் போட்டியிட  விரும்புபவர்களுக்கு விருப்ப மனுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அதிமுக அரசு பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது. மக்களிடம் அதைச் சொல்லி தேர்தலில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

அம்மா உணவகம்

ஏற்கனவே அம்மா உணவகங்களில் சப்பாத்தி, சாம்பார் சாதம் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு பணி செய்வதற்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதுபோன்ற நிலையில் புதிதாக திமுக தலைவர் பெயரில் எதற்காக உணவகம் என்று அவர் கேள்வி எழுப்பினார். அதோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும்,  திமுகவினர் கருணாநிதி அல்லது ஸ்டாலின் என பெயரில் வேண்டுமானாலும் உணவகங்களை திறந்து கொள்ளட்டும். ஆனால் இதனைத் திறந்து அம்மா உணவகங்களை மூடினால் அதிமுக அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்