“திமுக இல்லையெனில் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது”... காங்கிரசில் வெடிக்கும் சர்ச்சை

 
evks elangovan

கார்த்தி சிதம்பரம் கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தலில் கூட்டணி வைத்துள்ளோம் என்ற ஒரே காரணத்தால், தேர்தல் இல்லாத காலத்தில் மக்களின் பிரச்னைகளை பேசாத காரணத்தினால்தான், மக்கள் புதிதாக வரும் கட்சிகளை நோக்கி நகர்கிறார்கள் என அண்மையில் கார்த்தி சிதம்பரம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், கள்ளக்குறிச்சி விவகாரம் , என்கவுண்டர் விவகாரம் குறித்து, திமுக அரசுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் பேசினார்.

இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், “மக்களவை தேர்தலில் திமுக தயவால் தான் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. கார்த்தி சிதம்பரம் கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்கிறார். காங்கிரஸ் யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என தேர்தலுக்கு முன் கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கலாமே. கார்த்தி சிதம்பரம் சுயநலத்துடன் பேசி வருகிறார். வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அமர்ந்த பின் இப்படி பேசுவது என்ன நியாயம்? திமுக வேலை செய்யாவிட்டால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது. கட்சி நலனைவிட தேச நலனே முக்கியம். திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது போன்ற பேச்சு எந்த விதத்தில் நியாயம்? மக்களவை தேர்தலில் காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட இடங்களே அதிகம். திமுக பெருந்தன்மையோடு செயல்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.