வெறுப்பு பேச்சுகள் கூடாது, தவறினால் விளைவுகளை சந்திக்க வேண்டும்... வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

 
தேர்தல் ஆணையம்

வெறுப்பு பேச்சுகள் இல்லை என்பதை வேட்பாளர்கள் உறுதி செய்யவேண்டும், இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட்,  பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும்  தேர்தல் நடத்தப்படும் தேதிகளை  தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதில்  உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக (பிப்.10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7)  தேர்தல் நடைபெறும் எனவும், மணிப்பூரில் 2 (பிப்ரவரி 27, மார்ச் 3) கட்டங்களாகவும்,  உத்தரகாண்ட் , பஞ்சாப், கோவா (பிப்ரவரி 14) ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக (பிப்ரவரி 14) தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மேலும் மார்ச் 10ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வெறுப்பு பேச்சு

தேர்தல் ஆணையம் சில முக்கிய அறிவுப்புகளையும் அறிவித்துள்ளது. அவை இதோ:
கோவிட் பரவலை கருத்தில் கொண்டு இம்மாதம் 15ம் தேதி வரை நேரடி பொதுகூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. அதன் பிறகு பரிசீலனை செய்யப்படும்.
வெறுப்பு பேச்சுகள் இல்லை என்பதை வேட்பாளர்கள் உறுதி செய்யவேண்டும், இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வெற்றி ஊர்வலம் நடத்த  கடுமையான தடை விதிக்கப்படுகிறது. 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது நிலவும் கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட  கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் தொடர்பான விரிவான தகவல்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையத்தில் பதிவேற்றுவது கட்டாயம்.

அஞ்சல் வாக்கு

அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் முன்னணி பணியாளர்களாக கருதப்படுவார்கள். மேலும் வரும் நாட்களில் 3வது முன்னெச்சரிக்கை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும்.
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் 19 நோயாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம். சுவிதா மற்றும் பி.டபிள்.யூ. செயலிகளை வாக்காளர்கள் பயன்படுத்தலாம்.
சுமார் 60 சதவீத வாக்குச் சாவடிகள்  வெப்காஸ்ட் மூலம் கவர் செய்யப்படும்.
இந்த தேர்தலில் சேவை வாக்காளர்கள் உள்பட மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 8.55 கோடி பெண் வாக்காளர்கள்.