பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கான தடை 22ம் தேதி வரை நீட்டிப்பு.. தேர்தல் ஆணையம்

 
பொதுக்கூட்டம்

உத்தர பிரதேசம் உள்பட தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களில் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கான தடையை இம்மாதம் 22ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட்,  பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும்  தேர்தல் நடத்தப்படும் தேதிகளை  தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதில்  உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக (பிப்.10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7)  தேர்தல் நடைபெறும் எனவும், மணிப்பூரில் 2 (பிப்ரவரி 27, மார்ச் 3) கட்டங்களாகவும்,  உத்தரகாண்ட் , பஞ்சாப், கோவா (பிப்ரவரி 14) ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக (பிப்ரவரி 14) தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  மேலும் மார்ச் 10ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையம்

அதேசமயம், கோவிட் பரவலை கருத்தில் கொண்டு இம்மாதம் 15ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் நேரடி பொதுகூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. ஜனவரி 15ம் தேதி மீண்டும் கோவிட் நிலவரம் குறித்து ஆய்வு செய்து பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவிட் பரவல் அதிகரித்து வருவதால்,  பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

பேரணி

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நேரடி பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடை இம்மாதம் 22ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேசமயம், அரங்குகளின் (ஹால்கள்) திறனில் 50 சதவீதம் அல்லது உட்புறக் கூட்டங்களில் அதிகபட்சம் 300 பேர் அல்லது பேரிடர் மேலாண்மை அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பில் கட்சிகள் கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.