மோசடிக்கான ஆதாரமே இல்லை... வானதி சீனிவாசன் வெற்றி செல்லும் - ஹைகோர்ட் அதிரடி!
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி அதிக கவனம் பெற்றது. அதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியும் ஒன்று. அவருக்கு எதிராக அதிமுக, பாஜக கூட்டணி சார்பில் வானதி சீனிவாசன் களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கையும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்றது. இருவருக்கும் சரிக்கு சமமாக வாக்குகள் பதிவாகியிருந்தன. இறுதியாக நான்கு சுற்றில் முன்னேறி 1,728 வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வென்றார்.

இச்சூழலில் அவரது வெற்றியை எதிர்த்து, அவருடன் போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென் மண்டல தலைவரான கே.ராகுல் காந்தி தேர்தல் வழக்கை தொடர்ந்தார். அவர் மனுவில், "53,209 வாக்குகள் பெற்ற வானதி சீனிவாசன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். எனக்கு 73 வாக்குகள் மட்டுமே பதிவானது. தேர்தலுக்கு முன்பாக வானதி சீனிவாசனுக்கு எதிராக எதிர்ப்பலை நிலவிய சூழலில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்துதான் மூலம் தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். அதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென மே 3ஆம் தேதியே தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. பாரதிதாசன் தேர்தல் வழக்கில் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


