எஸ்பி வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சி பொறுப்பு பறிக்கப்படும்! மாவட்ட செயலாளர்களை அழைத்து எச்சரித்து அனுப்பிய இபிஎஸ்
அதிமுக கட்சி தன் பக்கம் தான் இருக்கியது என்பதை உறுதி செய்யவே இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இபிஎஸ் நடத்தியுள்ளதாக இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள், 10க்கும் மேற்பட்ட அமைப்பு செயலாளர்கள் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள், 10க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர். 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி குறித்தும், கட்சி இரண்டாக பிளவு பட்டிருப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பதவிக்காக சிலர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள். கட்சிக்கு தேர்தல் வெற்றி தோல்வி என்பது சகஜம். கட்சி என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தேர்தல் தோல்வி குறித்து விரைவில் மாவட்டம் வாரியாக தனி தனியாக ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்கள், தங்களது மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மான கடிதத்தையும், நிர்வாகிகளின் கையெழுத்து போட்ட படிவங்களை எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பித்துள்ளனர். அமைப்பு ரீதியாக 82 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், ஜெயகுமார், இளம்பை தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவில்லை. இரு அணியாக உள்ள நிலையில் கட்சி தன் பக்கம் தான் இருக்கிறது என்பதை உறுதி செய்யவே இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியதாக நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தன் பக்கம் இருப்பதை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சி பொறுப்பு பறிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

