துப்பில்ல.. தெம்பு திராணி இல்ல.. முதல்வரை விளாசி எடுத்த எடப்பாடி
![e](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/5a8045d216041a6b977fdd59e9257c68.jpg)
நானும் டெல்டா காரர் தான் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலினுக்கு, நீங்க டெல்டா காரர் தான் அப்புறம் எதுக்கு மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தீங்க என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் மேலும், அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை பாதுகாக்க துப்பில்லை; தெம்பு திராணி இல்லை என்று முதல்வரை கடுமையாக விளாசி எடுத்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து இன்று விவாதம் எழுந்தது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், முதல்வர் என்கிற முறையில் இல்லாமல் நானும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்கிற முறையில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறேன். இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப் போவதில்லை என்றார்.
இதன் பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீங்க டெல்டா காரர் தான் அப்புறம் எதற்கு மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தீர்கள் என்று முதல்வருக்கு கேள்வி எழுப்பியவர், செய்தியாளர்களை பார்த்து, நானும் டெல்டாகாரர்தான் என்று சொல்கிறார் முதல்வர். இதே டெல்டா காரர் தான் மீத்தேன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார் . பொன் விளையும் பூமியை பாதுகாத்தது அதிமுக தான் . நாங்கள் கொண்டு வந்து அமல்படுத்திய திட்டத்தை, சட்டத்தை பாதுகாத்தாலே போதும். சட்டசபையில் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசணும். அங்கே தான் குரல் கொடுக்கணும் என்றார்.
தொடர்ந்து அதுகுறித்து பேசிய எடப்பாடி, அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை பாதுகாக்க துப்பில்லை; தெம்பு திராணியில்லை என்று முதல்வரை கடுமையாக விளாசி எடுத்தார் . மேலும் இது குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நாங்கள் அறிவித்தோம். தமிழ்நாட்டின் உணவு தேவைகளை பூர்த்தி செய்கிறது டெல்டா மாவட்டம். அப்படி இருக்கின்ற நிலையில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் டெண்டர் விடப்பட்டது விவசாயிகளிடத்தில் வேதனையையும் வருத்தத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திமுக அரசு கும்பகர்ணன் போல இந்த விஷயத்தில் தூங்கிக் கொண்டிருக்காமல் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் . திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு முழுமூச்சோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.