எடப்பாடி அடித்த அந்தர்பல்டி! டெல்லி bossஐ சந்திப்பதற்கு முன்/ சந்தித்ததற்கு பின்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குமான மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது . டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அண்ணாமலையும் பங்கேற்று இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ். பி. வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
இந்த சந்திப்பில் அண்ணாமலையுடன் தகராருக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அமித்ஷா . இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அதிமுக -பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் . அதன்படியே அண்ணாமலையும் எடப்பாடி பழனிச்சாமியும் சமாதானமாகி அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.
முன்னதாக அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்குமான மோதலில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார் அண்ணாமலை . பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமியும் அவரது அணியினரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அந்த சூழலில் ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் அண்ணாமலை குறித்த கேள்விக்கு, ‘’ஏன்ங்க அவர பத்தியே பேசுறீங்க. இப்டி பேசி பேசியேத்தான்ங்க அவர் பெரிய ஆளா ஆக்குறீங்க. நீங்க அவர பத்தியே பேசவேண்டாம். நான் அரசிலுக்கு வந்து 50 வருசம் ஆகுது. என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு தெரியும். அவரு இப்டி பேட்டி கொடுத்து பெரிசா ஆகணும்னு நெனக்கிறாரு. தயவு செய்து அவரப்பத்தி என்கிட்ட கேட்காதீங்க. தயவு செய்து அவருடைய கேள்வியை என்கிட்ட கேட்காதீங்க. வேற யாரை பத்தியும் கேளுங்க. ஏன்னா... கட்சியில பல காலம் இருக்குவங்களுக்கு அடிப்படை தன்மை தெரியும். அப்டிப்பட்டவங்கள பத்தி கேட்டா நான் பதில் சொல்ல தயாரா இருக்கேன். முதிர்ந்த அரசியல்வாதிகள பத்தி கேளுங்க. நான் பதில் சொல்றேன். ’’என்று காட்டமாக பதில் அளித்து இருந்தார் .
அதே எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஏப்ரல் 27ஆம் தேதி அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அண்ணாமலையுடனான மோதல் குறித்த கேள்விக்கு, ‘’
நீங்க சொல்கின்றது தவறான கேள்வி. எங்களுக்கும் பாஜகவின் தமிழ்மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எந்தவித தகராறும் இல்லை. தகராறு இருந்தா ஈரோட்டுல வந்து எப்டி பிரச்சாரம் செய்வார்? ஊடக நண்பர்கள் திட்டமிட்டு அதிமுகவுக்கும் பாஜகவுக்கு விரிசலை ஏற்படுத்த வேண்டுமென்றே குளறுபடி செய்யுற மாதிரி கேட்கிறீங்க. அதுக்குத்தான் அப்டி பதில் சொன்னேன்’’என்று சிரித்தபடியே சமாளித்து இருக்கிறார் .
எடப்பாடி பழனிச்சாமி இந்த அந்தர்பல்டி குறித்து முன்னாள் அதிமுக எம்பி கே. சி. பழனிச்சாமி, ‘’டெல்லி bossஐ சந்திப்பதற்கு முன்/ சந்தித்ததற்கு பின்’’ என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
டெல்லி bossஐ சந்திப்பதற்கு முன் சந்தித்ததற்கு பின் @EPSTamilNadu #aiadmk #kcpalanisamy pic.twitter.com/R41TXEicbG
— K C Palanisamy (@KCPalanisamy1) April 27, 2023